பழுதான மின்னனு இயந்திரம்; பொங்கல் பரிசு பெறுவதில் இடையூறு
மின்னனு இயந்திரம் சரியாக இயங்காததால் பொங்கல் பரிசு பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு. தமிழக முழுவதும் இன்று பொதுமக்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக, தமிழக அரசு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து இன்று காலை முதல் அனைத்து நியாய விலை கடைகளிலும், கூட்டுறவு அங்காடிகளிலும் அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு வழங்க உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள வீரராக்கியம் பகுதியில் செயல்படும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 460 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணியில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஈடுபட்டனர். சுமார் 50- குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கிய நிலையில், திடீரென குடும்ப அட்டைகளை ஸ்கேன் செய்யும் மின்னணு இயந்திரம், திடீரென பழுதானதால் தொடர்ந்து அவர்கள் பணியை செய்ய முடியாமல் தவித்தனர். அதேசமயம், குழந்தை குட்டிகளுடன் பொருட்களை வாங்கி செல்லலாம் என்று ஆவலோடு வந்த பொதுமக்கள், பொருட்கள் கண்ணெதிரிலேயே வழங்க தயாராக இருந்த போதும், கூட்டுறவு சங்க அலுவலர்கள் பொது மக்களுக்கு வழங்க முடியாமலும், பொதுமக்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டதால், வந்திருந்த பொதுமக்கள் செய்வதறியாது, அமரக்கூட அங்கு வசதிகள் செய்யாததால், காம்பவுண்ட் சுவர் கட்டையில் அமர்ந்து காத்திருந்தனர். அதேசமயம் ஊழியர்கள் தங்களது மேல் அதிகாரிகளுக்கு மின்னணு இயந்திரம் செயல்படாத குறித்து அலைபேசியில் தகவல் அளித்தனர். ஆயினும் உடனடியாக எதுவும் சரி செய்யப்படாததால், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வேதனையோடு காத்திருந்தனர்.