"கால்நடைகளை கடித்து கொல்லும் நாய்களால் அருங்குன்றத்தில் அச்சம்"

கால்நடைகளை கடித்து கொல்லும் நாய்களால் அருங்குன்றத்தில் அச்சம்

கால்நடை பலி

அருங்குன்றம் கிராமத்தில், சில நாட்களாக ஆடு, மாடுகளை தெரு நாய்கள் கடித்து குதறுவது கால்நடை விவசாயிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், அருங்குன்றம் கிராமத்தில், சில நாட்களாக ஆடு, மாடுகளை தெரு நாய்கள் கடித்து குதறுவது கால்நடை விவசாயிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மட்டுமின்றி, வீட்டு கொட்டகையில் உள்ள கால்நடைகளையும் நாய்கள் கடித்து பலியாக்குவது, அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் கூறியதாவது: அருங்குன்றத்தில், சில நாட்களாக தெரு நாய்கள் கடித்துக் குதறி, கால்நடைகள் இறப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் இவ்வாறு மூன்று பசுக்கள் இறந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை எங்கள் வீட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்த இரண்டு பசுக்களை, ஐந்தாறு நாய்கள் ஒன்று சேர்ந்து கொடூரமாக கடித்துள்ளது. பசுவின் கதறல் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்த போது, பசுக்களின் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்படுத்தி காது மற்றும் கால்களை துண்டாக்கி உள்ளது. இதில், இரண்டு பசுக்களும் வலியால் துடித்து இறந்து போனது. இதனால், கால்நடைகள் வளர்த்து பிழைப்பு நடத்தும் எங்களது வாழ்வாதாரம் பாதித்து வருகிறது. எனவே, இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்."

Tags

Next Story