உளுந்து, எள் பயிர் காப்பீடு செய்ய பிப்.15 கடைசி நாள்

உளுந்து, எள் பயிர் காப்பீடு செய்ய பிப்.15 கடைசி நாள்
பயிர் காப்பீடு திட்டம்
நெல் தரிசில் உளுந்து பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள பிப்ரவரி 15 ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்திருப்பது: விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில், நிகழ் கோடைப்பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இப்கோ டோக்கியோ பொது காப்பீடு நிறுவனமும், பியூச்சர் ஜெனராளி இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி - நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2023 - 24 ஆம் ஆண்டில், ரபி பருவத்தில் கோடை நெல் மற்றும் நெல் தரிசில் உளுந்து, எள் பயிர் ஆகியவற்றுக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளன.

நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.82 பிரீமியத்தை பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள்ளும், கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 542 பிரீமியத்தை மார்ச் 15-ஆம் தேதிக்குள்ளும், எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.212 பிரீமியத்தை மார்ச் 15-ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, இ-சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன் மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1433), வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story