பெண் போலீஸ் தற்கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பெண் போலீஸ், குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி (30). திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீசாக பணியாற்றி வந்த இவர் கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு மாறுதலாகி வந்தார். இதையடுத்து நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இவர் தற்போது நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள லேப்-டாப் அறைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
வைஷ்ணவிக்கு மணிவேல் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சம்பத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய வைஷ்ணவி வீட்டிலிருந்த பூச்சிமருந்தை குடித்துள்ளார். அதன் பின்னர் வயிற்றில் எரிச்சல் ஏற்படவே நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தானாக சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வைஷ்ணவி உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக வைஷ்ணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
