உறவினர் பெண்ணின் ஆபாசப்படம் இருப்பதாக கூறி விவசாயிடம் ரூ.7ஆயிரம் மோசடி

உறவினர் பெண்ணின் ஆபாசப்படம் இருப்பதாக கூறி  விவசாயிடம் ரூ.7ஆயிரம் மோசடி
சைபர் கிரைம் மோசடி
தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாடு பகுதியில் விவசாயி இடம் நூதன முறையில் ஏமாற்றிய நபரை சைபர் கிரைம் காவல்துறை தேடி வருகிறது

உறவினர் பெண்ணின் ஆபாச புகைப்படம் இருப்பதாக கூறி விவசாயியை மிரட்டி ரூ.7 ஆயிரம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் 49 வயதான விவசாயி. இவருடைய செல்போனிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபரிடமிருந்து அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் விவசாயியின், நெருங்கிய உறவினர் பெண் ஒருவரின் பெயரை சொல்லி அவரை எனக்கு நன்றாக தெரியும். மேலும் அவர் காதலிக்கும் போது அவருக்கு தெரியாமல் எடுத்த ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதை இணையதளத்தில் பகிராமல் இருப்பதற்காகவும், புகைப்படங்களை அழிப்பதற்காகவும் நீங்கள் நான் கேட்கும் பணத்தை உடனடியாக தர வேண்டும் என மிரட்டினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி, அந்த நபரின் வங்கி கணக்கிற்கு ரூ.7 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார்.இதையடுத்து ஆபாச புகைப்படத்தை அழிப்பது தொடர்பாக விவசாயி மர்மநபரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு மறுமுனையில் பேசியவர் பின்னர் மீண்டும் அழைக்கிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் தான் மோசடியாக ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயி, இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story