“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் - ஆட்சியர் ச.உமா ஆய்வு
நாமக்கல்வட்டத்தில்,மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்ச.உமா “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் நாமக்கல் வட்டத்தில் தங்கி அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இத்திட்டம் நாளை (31.01.2024) புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தாளம்பாடி கிராமத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை, தொடர்ந்து நாமக்கல் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை, நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து நாமக்கல் நகராட்சி அலுவலகத்திற்கு பயணிகளுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தில் (pink) பயணித்தார்.
இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்களுடன் காலை 9.00 மணி முதல், மறுநாள் காலை 9.00 மணி வரை நாமக்கல் வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், மேம்பட்ட சேவைகள் வழங்குதல் / திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காணப்படும். மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்று அவற்றின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார். எனவே, அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற்றிட ஏதுவாக, இந்த முகாமினை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நாமக்கல்மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்ச.உமா தெரிவித்துள்ளார்.