ரேசன் கடையில் தீ விபத்து

ரேசன் கடையில் தீ விபத்து
எரிந்த ரேஷன் கடை
கன்னியாகுமரி மாவட்டம், காக்கோட்டு ரேஷன் கடையில் ஏற்பட்ட தீவிபத்தால் பொங்கல் பரிசு பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே காக்கோட்டுவிளை பகுதியில் ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 2-வது நாளாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கிய பின்னர் மாலை 6 மணிக்கு ரேசன் கடை ஊழியர் கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று அதிகாலை ரேசன் கடையில் தீ எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரேசன் கடையின் பூட்டை உடைத்து தீயை அணைத்தனர்.

சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் ரேசன் கடையில் இருந்த ஆவணங்கள், பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்கப்பட இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து நாசமாகி இருந்தது. ரேசன் கடையில் தீ விபத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் எரிந்து நாசமானது குறித்து ரேசன் கடை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்த முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்குவதற்கு இன்று காலையிலும் பொதுமக்கள் வந்திருந்தனர். கடையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story