தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து
தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கு தீ விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புகைமூட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு மருத்துவ முகாம் நடத்தி வீடு, வீடாகச் சென்று முகக்கவசத்தை மாநகராட்சி பணியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பை கிடங்கில், தற்போது 10 ஏக்கரில் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் ஆண்டுதோறும் கோடை காலம் மற்றும் காற்று அதிகமாக வீசும் காலங்களில் தீ விபத்து ஏற்படுவது,

வழக்கம். அப்போது சீனிவாசபுரம், மேலவீதி, மேல அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் புகைமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்படுவதால் இந்த குப்பைக் கிடங்குக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சியின் தண்ணீர் லாரிகள் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், வீட்டில் இருப்பவர்களும் சாலையை கடப்பவர்களும் புகையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் ஆணையர் ஆர்.மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்ததால் அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்ய அதிகாரிகளிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மூச்சுத் திணறல் மற்றும் பிற அறிகுறிகளைக் கண்டறிய, 500 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று சுகாதார ஆய்வு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வை மேற்கொள்ள 56 பணியாளர்களைக் கொண்ட 5 மருத்துவக் குழுவினர் நியமிக்கப்பட்டனர்.

மொத்தம் 12 தெருக்களில் உள்ள 341 வீடுகளில் 815 மக்களிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு முகக் கவசங்களும் வழங்கப்பட்டன.

இந்த மருத்துவ ஆய்வின்போது இருவருக்கு லேசான மூச்சு திணறல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு நெபுலைசர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்துகளும் வழங்கப்பட்டன.

Tags

Next Story