தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ.5 கோடி பொருட்கள் எரிந்து நாசம்

தொழிற்சாலையில் தீ விபத்து - ரூ.5 கோடி பொருட்கள் எரிந்து நாசம்

தீ விபத்து

வாலாஜாபாத் அருகே பூச்செண்டு தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர் .

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த நத்தாநல்லுாரில் 'பொக்கே' உள்ளிட்ட செயற்கை ரசாயன முறை பூச்செண்டு போன்ற அலங்கார பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இங்கு, தயாரிக்கும் அலங்கார பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பணி முடிந்து, தொழிலாளர்கள் மாலை வீட்டுக்கு புறப்பட்டனர். காவலாளிகள் மட்டுமே பணியில் இருந்தனர். அப்போது, நேற்று முன்தினம் இரவு 12:00 மணியளவில், தொழிற்சாலைக்குள் கரும்புகையுடன் கூடிய அதிகளவிலான புகை வெளியேறியது. இதை கண்ட காவலாளிகள் உள்ளே சென்று பார்த்த போது, தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், தொழிற்சாலை முழுதும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலைய வீரர்களும், அப்பகுதிக்கு வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். நேற்று காலை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், தொழிற்சாலைக்குள் உற்பத்தி செய்து வைத்திருந்த அலங்கார பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் உட்பட 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. காஞ்சிபுரம் டி.எஸ்.பி., ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார், தொழிற்சாலை பகுதிகளில் ஆய்வு செய்தனர். மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்."

Tags

Next Story