2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்

2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம்

தீ விபத்து

பல்லாவரத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில், வண்டலுார் -- ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில், தண்டவாளத்தின் அருகில் பழைய இரும்பு கடை மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி கடை, வெல்டிங் கடை ஆகியவை உள்ளன.

பிளாஸ்டிக் கடையில், நேற்று மதியம் 12:00 மணியளவில், திடீரென தீப்பற்றி கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், கிளாம்பாக்கம் போலீசாருக்கும், மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், தீ மேலும் பரவாமல் இருக்க, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

ஆனால், அதற்குள் தீ அருகில் இருந்த கடைகளுக்கும் பரவி, கரும்புகை அதிக அளவில் வெளியேறியது. இதனால், ஜி.எஸ்.டி., சாலை முழுதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அதனால், இருசக்கர வாகனங்களில் சென்றோருக்கும், பயணியருக்கும் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து, தீ மளமளவென எரிந்ததால், தாம்பரம் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய பகுதியிலிருந்தும், தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

இரண்டு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். கடை மின் இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின எனவும், மறைமலை நகர் தீயணைப்பு நிலைய மேலாளர் கார்த்திகேயன் கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story