சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் செவ்வாய் பேட்டை தீயணைப்பு துறையினர் பங்கேற்றனர்
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஆஸ்பத்திரி டீன் மணி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் சிவகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்படும்போது மருத்துவ பணியாளர்கள் தங்களை தற்காத்து கொள்ளும் நடைமுறைகள் குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு சாதனங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும், தீ விபத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதோடு நோயாளிகளை எப்படி பத்திரமாக வெளியே கொண்டு வருவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் போன்றவற்றை பயன்படுத்துவது பற்றி டாக்டர்கள், நர்சுகள் கேட்ட சந்தேகங்களுக்கு தீயணைப்பு துறையினர் விளக்கம் அளித்தனர். இந்த தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.