10 கடைகளில் அடுத்தடுத்து பரவிய தீ !
தீ
மதுரவாயல், மேட்டுக்குப்பம் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே, தனியாருக்கு சொந்தமான ஹோட்டல், டயர் கடை, பிளாஸ்டிக் குழாய் மற்றும் உதிரி பாகங்கள் சேமிப்பு கிடங்கு, கார் ஷெட் என, 10க்கும் மேற்பட்ட கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரவாயல், மேட்டுக்குப்பம் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே, தனியாருக்கு சொந்தமான ஹோட்டல், டயர் கடை, பிளாஸ்டிக் குழாய் மற்றும் உதிரி பாகங்கள் சேமிப்பு கிடங்கு, கார் ஷெட் என, 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று காலை 6:00 மணிக்கு, பிளாஸ்டிக் குழாய் கிடங்கில் தீ பற்றியது. இந்த தீ, அருகில் உள்ள டயர் கடை, உரம் தயாரிக்கும் மையம் மற்றும் கார் ஷெட் பகுதிகளுக்கும் பரவியது. மதுரவாயல், பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளிலிருந்து 10 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். முதற்கட்டமாக, கார் ஷெட்டில் இருந்த 15 கார்களை, தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதற்குள், பிளாஸ்டிக் பைப் கிடங்கு, டயர் கடைகளில் இருந்த பொருட்கள் வெடித்து சிதறின. அப்பகுதி முழுதும் கரும்புகை சூழ்ந்ததால், மதுரவாயல் போலீசார், அச்சாலையில் வாகன போக்குவரத்தை தடை செய்தனர். மேலும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு, தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து, மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிளாஸ்டிக் குழாய் கிடங்கு, உரம் தயாரிக்கும் மையம் முழுமையாக சேதமடைந்தன. இதில் பிளாஸ்டிக் கிடங்கில் மட்டும், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல், கோயம்படு சந்தை 'ஏ' சாலையில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜி.வி., ஆம்னி பேருந்து ஒன்றில், நேற்று மாலை தீ பற்றியது. இதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த பழுதான ஒன்பது ஆட்டோக்கள், ஒரு காருக்கும் தீ பரவியது. மொத்தம் 11 வாகனங்களும் கொழுந்துவிட்டு எரிந்தன. தகவலறிந்து வந்த கோயம்பேடு, ஜெ.ஜெ., நகர், அண்ணா நகர் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை அணைத்தனர். எனினும் 11 வாகனங்களும் தீயில் முழுதாக நாசமாகின. கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story