பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் தொழிலாளி பலி

பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் தொழிலாளி பலி

பட்டாசு வெடித்து பலி

கெங்கவல்லி அருகே பட்டாசு குடோன் வெடித்து சிதறியதில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி பலியானார்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கடம்பூர் மேற்கு காடு பகுதியில் வசிப்பவர் தனசேகரன். இவர் அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சிறிய அளவில் 4 அறைகள் கட்டி பட்டாசு தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பட்டாசு ஆலையில் உள்ள முதல் கட்டிடத்தில் ஆலை உரிமையாளர் தனசேகரன், கூலமேடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ராஜமாணிக்கம் (வயது 45) மற்றும் கடம்பூர் பகுதியை சேர்ந்த சத்தியா, விஜயா ஆகியோர் வேலை செய்தனர். 3-வது கட்டிடத்தில் உள்ள குடோனில் பட்டாசு மூலப்பொருட்களை எடுப்பதற்காக ராஜமாணிக்கம் சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வெடிப்பொருட்கள் வெடித்து சிதறி அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது . கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த கோர விபத்து நடந்தது. இதில் குடோனுக்குள் சென்ற தொழிலாளி ராஜமாணிக்கம் உடல்சிதறி இறந்தார். மேலும் அவரது உடல் சுமார் 100 அடி தூரத்தில் உள்ள சோளக்காட்டுக்குள் சிதறி விழுந்தது. அதேநேரத்தில் முதலாவது கட்டிடத்தில் வெளியில் பணியில் ஈடுபட்டிருந்த சத்தியா, விஜயா ஆகிய 2 பெண்கள் மீதும் பட்டாசு குடோனில் இருந்து சிதறிய பொருட்கள் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் மற்றும் கெங்கவல்லி போலீசார் காயம் அடைந்த அவர்கள் இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story