மலையில் தரிசனம் செய்ய சென்ற 40 பக்தர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் அருகே தென் பழனி சித்தகிரி மலை முருகன் கோவிலுக்கு சென்று மழையில் திரும்ப முடியாமல் தவித்த 40 பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 27 ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தொடர்மழை கடல் சீற்றம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளுக்கோ அல்லது கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வைகாசி விசாகம் என்பதால் முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள தென் பழனி சித்தகிரி மலையில் வீற்றிருக்கும் முருகர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்றுள்ளனர். இந்த கோவிலுக்கு செல்ல வழிப் பாதைகள் இல்லை. இந்நிலையில் காலை பெய்த தொடர் மழையால் மலையில் நீர் வடிந்து கொண்டிருந்தது.
இதனால் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் தரிசனம் முடித்துவிட்டு மாலை திரும்பிய போது தரையிறங்க முடியாமல் தவித்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மலைக்கு மேலே சிக்கிக் கொண்ட பக்தர்களை பத்திரமாக தரையிறக்கினர்.