தேர்தல் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி
முதற்கட்ட பயிற்சி
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் என 16 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்ட உள்ளனர்.
அவர்கள் தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து 4 கட்டமாக பயிற்சி முகாம் நடைபெறுகிறது. அதன்படி முதற்கட்ட பயிற்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதி வாரியாக நடக்கிறது. இதில் மொத்தம் 16 ஆயிரத்து 213 தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த பயிற்சி முகாம் கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்குட்பட்ட தேவியாகுறிச்சி பாரதியார் மகளிர் கல்லூரியிலும் நடக்கிறது. ஆத்தூர் தொகுதிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஏற்காடு தொகுதிக்கு மின்னாம்பள்ளி மகேந்திரா பொறியியல் கல்லூரியிலும், ஓமலூர் தொகுதிக்கு பத்மாவதி மகளிர் கல்லூரியிலும், மேட்டூர் தொகுதிக்கு மால்கோ வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், எடப்பாடி தொகுதிக்கு கொங்கணாபுரம் ஏ.ஜி.என். மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் பயிற்சி நடக்கிறது. இதேபோல் சங்ககரி தொகுதிக்கு சண்முகா என்ஜினீயரிங் கல்லூரியிலும், சேலம் மேற்கு தொகுதிக்கு சோனா கல்லூரியிலும், சேலம் வடக்கு தொகுதிக்கு ஜெயராம் கல்லூரியிலும், சேலம் தெற்கு தொகுதிக்கு சக்தி கைலாஷ் கல்லூரியிலும், வீரபாண்டி தொகுதிக்கு விநாயகா மிஷன்ஸ் கல்லூரியிலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.