பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு - வேளாண்துறை தகவல்

பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு - வேளாண்துறை தகவல்

மீன் வளர்ப்பு 

பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு திருவண்ணாமலை :- தமிழக அரசு, வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகளின் வருமானம் பெருக்க பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், பயிர் சாகுபடியில் மாநிலத்தில் முன்னோடி மாவட்டமாக இருந்து வருகிறது. இம்மாவட்டத்தில் விவசாய பணியே முதன்மையாக செய்து வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் ஈட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராக கொண்டு செயல்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) மூலம் மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி, ஊரக வளர்ச்சி துறையின் மூலம் விவசாய நிலங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகள் மற்றும் விவசாயிகள் சொந்தமாக அமைத்துள்ள பண்ணைக்குட்டைகள் மூலம் மழைநீர் சேமிப்பு மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதோடு வறட்சி காலங்களில் பயிர் சாகுபடி உபயோகத்திற்கு பயன்படுத்துவது மட்டுமில்லாமல் கூடுதல் வருமான விவசாயிகளுக்கு கிடைக்க மீன் வளர்ப்பு ஊக்கப்படுத்தப்படுகிறது. இந்த பண்ணைக்குட்டையில் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) மூலம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஒருங்கிணைப்புடன் மீன் வளர்ப்பு செயல்விளக்கம் 2022-23-ஆம் ஆண்டு வரை 122 செயல்விளக்கம் அமைக்கப்பட்டது. இந்த செயல்விளக்கத்தில் விவசாயிகளுக்கு ரூ.2,000/- மதிப்புள்ள 1000 எண்கள் மீன் குஞ்சுகளும், ரூ.2,000/- மதிப்புள்ள மீன் தீவனமும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2023-24-ஆம் ஆண்டில் 17 வட்டாரங்களில் உள்ள 17 விவசாயிகளின் பண்ணைக்குட்டையில் மீன் வளத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்விளக்கம் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பண்ணைக்குட்டையிலும் விடப்பட்டுள்ள 1000 மீன் குஞ்சுகள் சுமார் 5 முதல் 6 மாதத்திற்குள் 750 முதல் 1 கிலோ அளவிற்கு வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பண்ணைகுட்டையின் சராசரி மகசூல் சுமார் 600 முதல் 750 கிலோவாகவும், ஒரு கிலோ ரூபாய் 80 முதல் 120-க்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. விவசாயிகள் 5 முதல் 6 மாதங்களில் சுமார் ரூ.48,000/- முதல் ரூ.72,000/- வரை மீன் வளர்ப்பு மூலம் கூடுதல் வருவாய் பெற வாய்ப்புள்ளது. மேலும், மீன் வளர்ப்பு குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் மான்ய திட்ட விவரங்களுக்கு உதவி இயக்குநர் (மீன் வளர்த்துறை) வேலூர் அவர்களை அணுகுமாறு, திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், சி.ஹரகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story