குறைந்தது மீன்களின் விலை : மகிழ்ச்சியில் பொதுமக்கள்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் விலை குறைந்தது. இதனால் பொதுமக்கள் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்த ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்தனர். திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

இந்தநிலையில் மீன்பிடி தடை காலத்தையொட்டி கடந்த 2 மாதங்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்த விசைப்படகு மீனவர்கள் தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிந்ததை தொடர்ந்து நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் விலை சற்று குறைய ஆரம்பித்தது. கடந்த வாரம் கிலோ ரூ.1,500 வரை விற்பனையான சீலா மீன் நேற்று ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. அதுபோல் கிலோ ரூ.600 முதல் 700 வரை விற்பனையான விளை மீன் கிலோ ரூ.400 வரையும், கிலோ ரூ.600 வரை விற்பனையான பாறை மற்றும் ஊளி மீன்கள் கிலோ ரூ.350 வரையும் விற்பனையானது. பல நாட்களுக்குப் பிறகு மீன்களின் விலை சற்று குறைந்ததால் பொதுமக்கள் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

Tags

Next Story