விசைப்படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள்

விசைப்படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள்

ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்ற பின் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவுள்ள விசைப்படகுகள் ஆய்வு செய்யும் பணியை மீன்வளத்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்

தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை தேதி வரை 61 நாட்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிகக தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளில் உள்ள பழுதுகள் மற்றும் வலைகளை சரி பார்க்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் மீன்வள அமைச்சகம், அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது மீன்பிடி தடைக்காலத்தில், அனைத்து பதிவு பெற்ற மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்து, அதற்கேற்ற வகையில் இணையதள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி கலன்கள் மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடி கலன்கள் அனைத்தும் ஆய்வு செய்து படகுகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மீன்வளத்துறை வலைதளத்தில் புதுப்பிக்கவும், இயக்கத்தில் இல்லா மீன்பிடி படகுகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் தலைமையில் ஆய்வு பணிகள் துவங்கியுள்ளது.

மீன்வளத்துறை அலுவலர்கள் அடங்கிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டு, தரங்கம்பாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார் ஆகிய நான்கு மீன்பிடி துறைமுகங்களில் உள்ள 406 விசைப்படகுகளின் தகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தரங்கம்பாடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடலில் செலுத்தும் தகுதி உடையவையா, இயந்திரத்தின் தன்மை, பதிவு எண், பதிவு புத்தகத்தின் நகல், மீன்பிடி உரிமம், காப்புறுதி சான்றிதழ், டீசல் மானிய புத்தகம் போன்றவற்றை ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து விபரங்களை சேகரித்தனர். இந்த ஆய்வு அறிக்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் விசைப்படகுகள் இயங்குவதற்கான அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story