தூத்துக்குடி கடலில் தவறி விழுந்த மீனவா் பலி

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்த மீனவா் பலி

பைல் படம் 

தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தாா்.

தூத்துக்குடி இனிகோநகரை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் சுதாகர் (வயது 27). இவர் நேற்று முன்தினம் மிக்கேல் அந்தோணி என்பவருக்கு சொந்தமான படகில், அவரது தந்தை சுரேஷ், உரிமையாளர் மிக்கேல் அந்தோணி ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுதாகர் தவறி கடலுக்குள் விழுந்து விட்டாராம்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் படகில் இருந்தவர்கள் விரைந்து தவறி விழுந்த சுதாகரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story