மீன்,இறால் பிடிக்க வலைகளை தயார் செய்யும் செங்கல்பட்டு மீனவர்கள்

மீன்,இறால் பிடிக்க வலைகளை தயார் செய்யும் செங்கல்பட்டு மீனவர்கள்

'தங்குசு' ஒயரில், வலை பின்னும் மீனவர்கள் 

புயல் அச்சம் காரணமாக கடலுக்கு செல்லமுடியாத சூழலில் பகிங்ஹாம் கால்வாயில் மீன்,இறால் பிடிப்பதற்கேற்ற வலைகளை மீனவர்கள் தயார் செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட கடற்கரை பகுதியில், மீனவர்கள் வசிக்கின்றனர். வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடித்து விற்கின்றனர். இந்நிலையில், ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, வங்க கடலில் மீன்பிடிக்க, மத்திய அரசு தடை விதிப்பதால், மீன்பிடி தவிர்க்கப்படும். அக்டோபர் துவங்கி டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில், கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு, புயல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இக்காலத்தில், அவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென, தமிழக அரசு அறிவுறுத்துகிறது. தற்போது, பருவமழைக் காலம் துவங்கியுள்ளதால், அவர்கள் கடலுக்கு செல்லாமல் பாதிக்கப்படுவர். எனவே, வாழ்வாதாரம் கருதி, பகிங்ஹாம் கால்வாயில் மீன் பிடிப்பர். இதையடுத்து, கால்வாயில் மீன், இறால் பிடிப்பதற்கேற்ற வலை பின்னும் பணியில் மீனவர்கள் இறங்கிஉள்ளனர். இது குறித்து, மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர்கள் கூறியதாவது: மழைக்காலம் துவங்கிவிட்டது. கடலில் புயலும் ஏற்படும். நாங்கள் கடலுக்கு செல்ல, மீன்வளத்துறை அனுமதிக்காது. எங்களுக்கு பிழைப்பு நடக்க வேண்டும். அதனால், பகிங்ஹாம் கால்வாயில் மீன் பிடிப்போம். ஒரு நாளைக்கு, 500 ரூபாயாவது கிடைக்கும். கால்வாயில் மீன் பிடிக்க, 'தங்குசு' ஒயரில், வலை பின்னுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story