மேட்டூரில் மீனவர்கள் திடீர் போராட்டம்.
போராட்டம்
மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் கட்லா ,ரோகு, மிருகால், ஜிலேபி, அரஞ்சான் உள்ளிட்ட சிறிய வகை மீன்களை மீனவர் கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்யாமல் விடுமுறை நாட்களில் மட்டுமே மீனவர்கள் பிடித்து வரும் அனைத்து மீன்களையும் கொள்முதல் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக விடுமுறை நாளான இன்று மீனவர்கள் தங்கள் பிடித்து வந்த மீன்களை கூட்டுறவு சங்கத்துக்கு விற்பனை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன்பிடித் தொழிலை நம்பி சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வரும் நிலையில் மீனவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மீனவர்களிடம் மீன்களை கொள்முதல் செய்யாமல் லாப நோக்கில் செயல்படுவதை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக மீன்களை கொள்முதல் செய்ய வந்த ஊழியர்கள் மீன்களை வாங்காமல் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் காவல்துறையினர் அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என கூறியதையடுத்து மீனவர்கள் திரும்பிச் சென்றனர்.