சோகுப்பம் எட்டி தாங்கள் ஏரியில் மீன் பிடி திருவிழா
மீன் பிடி திருவிழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் சோகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட எட்டி தாங்கள் ஏரி பெரிய பரப்பளவில் உள்ளது, தற்போது கோடைக் காலம் என்பதால் ஏரியில் தண்ணீர்வற்றியதை அடுத்து மீன்பிடி திருவிழா நடக்க இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் அறிவித்தார்.
இதையடுத்து சோகுப்பம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான பெலாகுப்பம், ராஜாபாளையம், சத்தியமங்கலம், புதுப்பாளையம், நயம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் கையில் மீன்பிடி வலை துணி, பாத்திரங்கள், சாக்குப்பை ஆகியவற்றுடன் ஏரிக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் ஏரியில் இறங்கி மீன்பிடி வலை, கொசு வலை மற்றும் துணி ஆகியவற்றை பயன்படுத்தி மீன் களை போட்டிப்போட்டு பிடித்தனர். பிடித்த மீன்களை சாக்குப்பை, பாத்திரங்களில் போட்டு வைத்தனர்.
இந்த மீன்பிடி திருவிழாவில் சுமார் 3 டன் அளவுக்கு விரால், உலுவை, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்ததால் மீன் பிடித்தவர்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் எடுத்துச்சென்றனர்.