திருப்பத்தூர் அருகே மீன்பிடி திருவிழா - ஏராளமானோர் பங்கேற்பு
மீன் பிடி திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே அரிபுரம் கிராமத்தில் உள்ள கிராம கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த கண்மாயில் ஆண்டுதோறும் விவசாயம் முடிந்து ஒவ்வொரு ஆண்டும் கண்மாயில் தண்ணீர் வற்றும் சூழ்நிலையில் எஞ்சியுள்ள தண்ணீரில் மீன்கள் பிடிக்கும் கிராமத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க அறிவிப்பு செய்யப்பட்டு மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
திருமயம், பொன்னமராவதி, திருப்பத்தூர், கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மீன் பிடியாளர்கள் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் கரையில் இருந்து ஓடி வந்து கண்மாய்க்குள் இறங்கி மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். இந்த கண்மாயில் பாப்புலெட், கெண்டை, கெழுத்தி, குறவை, அயிரை, சிலேபி, கட்லா உள்ளிட்ட பல வகையான நாட்டு வகை மீன்களை பிடித்து சாக்குப்பைகள், தென்னைநாா் பெட்டிகளில் அடைத்து வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.
இந்த மீன்பிடி திருவிழாவில் அரிபுரம் கிராமத்தார்களும் கலந்து கொண்டு கச்சா, கூடைகளை கொண்டு இந்த கண்மாயில் மீன்களை பிடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் சென்றனர்