வலசை வராத பிளமிங்கோ பறவைகள் - ஆய்வில் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, முனைக்காடு, வாலிநோக்கம், சித்திரங்குடி, தேர்த்தங்கல், காஞ்சிரங்குளம், சக்கரக்கோட்டை, மேலச்செல்வனூர் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலங்களில் கடந்த இரண்டு நாட்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் பகான் ஜகதீஸ் சுதாகர், ராமநாதபுரம் வனசரகர், சென்னை, மதுரை சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என 50 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இந்த கணக்கெடுப்பின் போது சரணாலயங்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நீர்நிலை பகுதியில் பறவைகள் அதிகளவு கண்டறியப்பட்டுள்ளது. வாலிநோக்கம், கீழக்கரை பகுதியில் உள்ள கண்மாய்களில் பிளமிங்கோ மற்றும் மல்லல், ஆர் எஸ் மங்கலம், உத்தரகோசமங்கை, கண்மாய்களில் அதிகமான பறவைகள் கணக்கிடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 75 சதவீத கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் இரண்டு மூன்று முறை பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வழக்கமாக தனுஷ்கோடி பகுதிகளுக்கு பிளமிங்கோ பறவைகள் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாத இறுதி வரை வலசை வருவது வழக்கம்.ஆனால் கடந்தாண்டு பிளமிங்கோ பறவைகள் மிகவும் கால தாமதமாக வலசை வந்த நிலையில் எதிர்பார்த்த எண்ணிக்கையில் பிளமிங்கோ பறவை வரவில்லை. அதே போல் இந்த ஆண்டு நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் தனுஷ்கோடி பகுதியில் ஒரு பிளமிங்கோ பறவை கூட கண்டறியப்படவில்லை என பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நத்தை கொத்தி நாரை, கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகங்கள் கொக்குகள் உள்ளிட்டவைகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு கணக்கெடுப்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் காணப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் அதிகமாக உள்ளது என ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.