வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி: 6வது நாளாக மக்கள் அவதி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகன மழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.  குறிப்பாக முத்தம்மாள் காலனி, பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர். எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.