குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: இன்று குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், பிரதான அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. சென்னை வானிலை மையம் அறிவித்த கனமழை எச்சரிக்கை (ஆரஞ்ச் அலா்ட், ரெட் அலா்ட்) எதிரொலியாக குற்றாலம் அருவிகள், அணைகள் மற்றும் நீா்நிலைகளில் கடந்த 17ஆம் தேதி முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் ஐந்தருவி,புலியருவியிலும், நேற்று முதல் பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் குளிக்க அனுமதியளித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் உத்தரவிட்டாா். ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு இருந்ததாலும், பேரருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாலும் இவ்விரு அருவிகளிலும் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
அதேவேளையில், பேரருவியில் பழையகுற்றாலம், சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனா். இதனிடையே, நேற்று காலை முதல் மீண்டும் இடைவிடாமல் பெய்த மழையால் பேரருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக்கொட்டியது. இதையடுத்து, பழையகுற்றாலத்திலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.