குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு - அருவிகளில் குளிக்க தடை
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு. 2 வது நாளாக அருவிகளில் குளிக்க தடை
தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான செங்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், ஆய்க்குடி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில், சிவகிரி பகுதியில் தலா 7 மி.மீ மழையும், தென்காசியில் தலா 6.20 மி.மீ மழையும், செங்கோட்டையில் 4.60 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. தென்காசியில் பெய்து வரும் மழை காரணமாகத் தென் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளமான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவியின் தடுப்புச் சுவரைத் தாண்டி, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றால அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கும் காரணத்தால் 2வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story