சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு: தரைவழி பாலம் துண்டிப்பு
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்றிரவு சங்ககிரி மற்றும் அரசிராமணி, தேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் 54.6 மில்லி மீட்டர் மலையளவு பதிவாகியுள்ளது.
இதே போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் அதிகபட்சமாக 86.4 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இன்று சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட அம்மன் கோயில் காடு பகுதியில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட தரைவழி பாலம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் அப்பகுதிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் கிராமப்புற மாணவ, மாணவிகளும் பொதுமக்களும், விவசாயிகளும் போக்குவரத்து இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.