ஊட்டியில் மலர் கண்காட்சி பணிகள் தீவிரம்
பூந்தொட்டிகளை மலர் மாடத்தில் அடுக்கும் பணி
நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கோடை சீஸனான ஏப்ரல், மே மாதங்களில் தாவரவியல் பூங்காவிற்கு 8.5 லட்சம் பேர் வந்தனர். இதையடுத்து 2-வது சீஸன் மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர்.
இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர். இந்த நிலையில் வருகிற 17ம் தேதி மலர் கண்காட்சி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மலர் கண்காட்சியை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கி 10 நாட்கள் நடத்த தோட்டக்கலை துறை நிர்வாகத்தினர் ஆலோசனை செய்து வருகின்றனர். இதனால் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்கான இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
தாவரவியல் பூங்காவில் பூந்தொட்டிகளை மலர் மாடத்தின் அடுக்குவது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது. பூங்கா நுழைவு வாயில் பகுதி கதவுகள் பூங்காவில் உள்ள மரச் சாமான்கள் முக்கியமான பொருள்கள் ஆகியவற்றுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் முடிந்து விட்டது. மேலும் தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை வறட்சி காரணமாக தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் லாரிகளில் தண்ணீர் வாங்கி புல்வெளி மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மலர்கண்காட்சிக்காக புல்வெளி மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அடுத்த 2 வாரத்திற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க முடிவு செய்து இருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.