தஞ்சாவூரில் ரூ.25 லட்சம் செலவில் உருவாகும் மரகதப்பூஞ்சோலை
தஞ்சாவூரில் ரூ.25 லட்சம் செலவில் உருவாகி வரும் மரகதப் பூஞ்சோலை பணிகளை, திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். தமிழக முதல்வரின் சிறப்பு அறிவிப்பின் கீழ், அனைத்து மாவட்டங்களுக்கும் மரகதப் பூஞ்சோலை உருவாக்கும் திட்டத்தில், தஞ்சாவூரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் கடற்பசு உருவத்துடன் கூடிய சங்க இலக்கிய மரத் தொகுதிகளுடன் கூடிய இப்பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் ந.சதீஷ் நேரில் ஆய்வு செய்து, இதில் தனிச்சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட வன அலுவலர் தலைமையிலான குழுவினரிடம் விளக்கினார். பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த பூஞ்சோலையில், கடற்பசு முழு உருவச்சிலை, சங்க இலக்கிய மரங்கள், மலர் செடிகள், நிழல் ஓய்விடங்கள், மூத்தோர்க்கான நடை பாதைகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு கருவிகளுடன் கூடிய சூழல்களும் உருவாக்கப்படுகிறது என மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி எடுத்துரைத்தார். இந்த ஆய்வின் போது வனத்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.