தோவாளையில் பூக்கள் விலை உயா்வு - பிச்சிப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை

தோவாளையில் பூக்கள் விலை உயா்வு - பிச்சிப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை

பைல் படம் 

மலர் சந்தை

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பிரபலமான மலர் சந்தை உள்ளது. உள்ளூா் மட்டுமன்றி பழவூா், குலசேகரபுரம், யாக்கோபுரம், பணகுடி, உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பிச்சிப்பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதேபோல் மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மல்லிகைப் பூக்களும், புளியங்குடி பகுதியிலிருந்து துளசி, பச்சை போன்றவையும் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.

தோவாளை பூச்சந்தையிலிருந்துதான் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலத்துக்கும் பூக்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், ரூ.1000-க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ, கோவில் விசேஷங்கள் முன்னிட்டு கிலோ ரூ. 3,000-க்கு விற்பனையானது. இப்பூக்கள் ஒரே நாளில் ரூ. 2,000 வரை விலை உயா்ந்தது. மேலும், கிலோ ரூ. 900-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ரூ.300 உயா்ந்து ரூ. 1,200-க்கு விற்பனையானது.கேந்தி, ரோஜாப்பூ, அரளிப்பூக்கள் கிலோ ரூ.100- க்கு விற்கப்பட்டன.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில்,- அண்மைக் காலமாக பிச்சிப்பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. மேலும் வைகாசி மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அம்மன் வழிபாட்டுக்கு மக்கள் பிச்சிப்பூக்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவா். இதனால் தேவை அதிகரித்து விலையும் உயா்ந்துள்ளது. தொடா்ந்து முகூா்த்த நாள்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றனர்.

Tags

Next Story