புதிய நீதிக்கட்சி நிர்வாகி வீட்டில் கட்டு,கட்டாக பணம் பறிமுதல்

புதிய நீதிக்கட்சி நிர்வாகி வீட்டில் கட்டு,கட்டாக பணம் பறிமுதல்

பைல் படம் 

மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் புதிய நீதிக்கட்சி நிர்வாகி வீட்டில் ரூ.8.5 லட்சம் சிக்கியது. மேலும், வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்த வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பாஜ கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவருடன் அக்கட்சியின் வணிகர் அணி தலைவர் வினோத், வேலூரில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே வணிகர் அணி தலைவர் வினோத் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுரவாயலில் உள்ள வினோத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த புதிய நீதிக்கட்சி மற்றும் பாஜ நிர்வாகிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதை தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் வினோத் வீட்டில் சோதனை செய்தபோது ரூ.8.5 லட்சம் ரொக்கப்பணம் சிக்கியது. மேலும், 60 வேட்டிகள், 60 சேலைகள், மணிபர்ஸ் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம், என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய நீதிக்கட்சி நிர்வாகி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் கட்டுக் கட்டாக பணம், பரிசுப் பொருட்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story