நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு திருச்சியில் உணவு தயாரிப்பு
உணவு தயாரிப்பு
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக திருச்சி மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் இருந்து தினமும் உணவு தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது. தமிழக அரசின் காலை உணவு திட்டத்துக்காக மரக்கடையில் உள்ள சையது முதுா்ஷா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடம், மாநகராட்சியின் மைய அலுவலகத்தின் பின்புறம் உள்ள உணவுக் கூடம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள உணவுக் கூடம் உள்ளிட்ட 5 இடங்களில் உணவு தயாரித்து அனுப்பப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை ஒரு லட்சம் பேருக்கு தேவையான கலவை சாதம் தயாரித்து, தனித்தனி பெட்டிகளில் அடைக்கப்பட்டு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை 50 ஆயிரம் பேருக்கான சப்பாத்தி தயாரித்து அனுப்பப்பட்டது. இந்தப் பணியில் சமையல் கூட பணியாளா்கள், மாநகராட்சிப் பணியாளா்கள், மகளிா் குழுவினா் என 100-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். இதில் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக வழங்கும் வகையில் சப்பாத்தி, குருமா ஆகியவற்றை பொட்டலங்களாக தயாரித்து அனுப்பினா். மேலும், தண்ணீா் பாட்டில்கள், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட ரொட்டி வகைகள், மெழுகுவா்த்தி, தீப்பெட்டி, நாப்கின், படுக்கை விரிப்பு, துண்டுகளும் சுமாா் ஒரு லட்சம் பேருக்கு வழங்கும் வகையில் சேகரித்து லாரிகள் மூலம் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.