வணிக நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு!
ஆய்வு
விராலிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இயங்கி வரும் சில வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதன் தொடர்ச்சியாக, விராலிமலை- மணப்பாறை சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், ஒரு சில கடைகளில் காலாவதியான உணவுப்பொருள்கள் விற்பனைக்கு இருந்ததை கண்டறிந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். அதோடு, காலாவதி பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து, உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பொருள்கள் மற்றும் காலாவதியான பொருள்களை விற்பனை செய்தால் கடைக்கு சீலிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தனர். இந்த ஆய்வில் கொடும்பாளூர் சுகாதார ஆய்வாளர் மாரிக்கண்ணு, செல்வராஜ் மற்றும் விமல், சதீஷ்குமார், சிவசங்கரன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.