20 ஆண்டாக சாலை வசதியின்றி தேவனுார் மக்கள் அவதி

20 ஆண்டாக சாலை வசதியின்றி தேவனுார் மக்கள் அவதி
20 ஆண்டாக சாலை வசதியின்றி தேவனுார் மக்கள் அவஸ்தை
20 ஆண்டாக சாலை வசதியின்றி தேவனுார் மக்கள் அவதிக்குள்ளகியுள்ளனர்.

செய்யூர் அருகே சித்தாமூர் - செய்யூர் சாலையில், எல்.என்., புரம் கிராமத்தில் இருந்து விராலுார் ஊராட்சிக்கு உட்பட்ட தேவனுார் கிராமத்திற்கு செல்லும், 1.3 கி.மீ., பாதை உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து,

ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், தினசரி பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், விவசாயப் பணிகளுக்கு செல்லும் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது: கிராமத்திற்கு செல்லும் இந்த பாதையை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறோம். இதுவே எங்கள் கிராம மக்களின் பிரதான சாலையாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இந்த சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது,

பின், பணி நிறுத்தப்பட்டது. காரணம் தெரியவில்லை. இதனால், 20 ஆண்டுகளாக சேதமடைந்த சாலையில் தான் சென்று வருகிறோம். மருத்துவ அவசரத்திற்கான ஆம்புலன்ஸ் கூட, இந்த வழியில் வருவது இல்லை. எங்களது சொந்த வாகனத்தில், நல்லுார் கூட்டு சாலை வரை ஏற்றிச்சென்று, பின் ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டு வருகிறோம். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, ஊராட்சி தலைவர் இளவரசி கூறியதாவது: தேவனுார் செல்லும் பிரதான சாலையில், தனிநபருக்கு சொந்தமான சிறிய அளவிலான இடம் உள்ளது. அவர், சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பதால், சாலை அமைப்பதில் சிக்கல் உள்ளது. சாலை அமைக்கவும், பேருந்து நிறுத்தம் அமைக்கவும், ஊராட்சி சார்பாக தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Next Story