குத்தகை பாக்கியை செலுத்த நிர்பந்தம் - விளக்கம் கேட்கும் விவசாயிகள்

குத்தகை பாக்கியை செலுத்த நிர்பந்தம் - விளக்கம் கேட்கும் விவசாயிகள்

செயல் அலுவலரிடம் மனு 

தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகள் லட்சக்கணக்கில் குத்தகை பாக்கி வைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், குத்தகை பாக்கி தொடர்பான விரிவான விவரங்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், வெண்டையம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான, சுமார் 200 ஏக்கருக்கு மேலான நஞ்சை நிலங்களை, அதே கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தலைமுறை தலைமுறையாக குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு, திருக்கோயில் செயல் அலுவலரிடம் இருந்து ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை குத்தகை நிலுவை இருப்பதாகவும், உடனடியாக குத்தகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேற்படி நிலுவைத் தொகை, கடந்த 40 பசலி ஆண்டுகளாக நிலுவை மொத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா ஆகியோர் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் கலந்துரையாடினர்.

அந்த அடிப்படையில், திங்கள்கிழமை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள, திருக்கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில், சங்கத்தின் கிராம நிர்வாகிகளான இம்மானுவேல், ராஜாங்கம், ராஜேந்திரன், ராஜகுரு உள்ளிட்ட விவசாயிகளுடன் மாவட்டச் செயலாளர் எம்.ராம் திருக்கோயில் செயல் அலுவலர் விஜயராகவனை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், விவசாயிகள் தங்கள் நிலுவைத் தொகையை தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில், 40 பசலி ஆண்டுகளை ஒவ்வொரு பிர்காவாக, ஒவ்வொரு பசலி வாரியாக தெரிவிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட கோயில் நிர்வாகத்தினர், 'குத்தகைதாரர்கள் கோரியுள்ள தகவலை உடன் தருவதாக' தெரிவிக்கப்பட்டது. 'கோயில் நிர்வாகத்தினர் அளிக்கும் பதிலை பெற்று, உரிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்' என தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story