சைக்கிளில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினர் தஞ்சாவூருக்கு வருகை
தஞ்சாவூரில் சைக்கிளில் புறப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.
சைக்கிளில் வந்த சுற்றுலா பயணிகள்
சென்னையிலிருந்து கொச்சி வரை சைக்கிளில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள் தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தனர். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 15 பேர் சென்னையிலிருந்து ஜனவரி 21 ஆம் தேதி சைக்கிளில் சுற்றுலா புறப்பட்டனர். மொத்தம் 15 சைக்கிள்களில் 9 ஆண்கள், 6 பெண்கள் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி, சிதம்பரம் வழியாக வந்த இவர்கள் தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்தனர். தஞ்சாவூர் பெரியகோயிலை பார்த்துவிட்டு இரவு தங்கினர். பின்னர், வியாழக்கிழமை காலை புறப்பட்டு சைக்கிள்களில் காரைக்குடி நோக்கிப் புறப்பட்டனர். நாள்தோறும் 100 கி.மீ. பயணம் செய்யும் இவர்கள் மொத்தம் 15 நாள்களில் ஆயிரத்து 400 கி.மீ. கடந்து கொச்சி வரை செல்லவுள்ளனர். இது குறித்து இப்பயணிகள் தெரிவித்தது: நகரங்களை விட கிராமங்கள் வழியாகவே செல்கிறோம். வழியில் உள்ள சுற்றுலா தலங்கள், கடல், மலை, கோயில் போன்றவற்றையும் பார்வையிடுகிறோம். இப்பயணத்தை பிப்ரவரி 3 ஆம் தேதி கொச்சியில் நிறைவு செய்கிறோம். பகலில் சாலையோர உணவகங்களில் சாப்பிட்டு, இரவு நட்சத்திர தங்கும் விடுதியில் தங்குகிறோம். இங்குள்ள சுற்றுச்சூழல்கள் மிகவும் பிடித்திருக்கிறது என்றனர்.


