மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள்

மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள்
சுற்றுலா பயணிகள்
மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.

மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டு பயணிகள் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.

தமிழகத்தில் சுற்றுலா செல்வதற்காக நியூசிலாந்து, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு 5 தம்பதிகள் என மொத்தம் 10 பேர் ஜனவரி 1 ஆம் தேதி வந்தனர். வழக்கமாக பேருந்து, கார், வேனில் அல்லாமல் இவர்கள் மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா செல்கின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த இவர்கள் மாமல்லபுரத்துக்கு ஜனவரி 5 ஆம் தேதி சென்றனர். பின்னர், புதுச்சேரி, வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு, தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை இரவு வந்தனர். தஞ்சாவூர் பெரியகோயிலில் கட்டடக்கலை, சிற்பக்கலையை ஒரு மணிநேரம் பார்வையிட்டு மதுரை நோக்கிப் புறப்பட்டனர்.

தொடர்ந்து, தேக்கடி, ஆலப்புழா, கொச்சி, மூணாறு ஆகிய பகுதிகளுக்கும் மோட்டார் சைக்கிள்களிலேயே செல்கின்றனர். 500 சிசி திறன் கொண்ட ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் கணவன் } மனைவி சேர்ந்து செல்கின்றனர். நாள்தோறும் 100 முதல் 150 கி.மீ. பயணம் செய்யும் இவர்கள் மொத்தம் 21 நாள்களில் 1,500 கி.மீ. செல்லவுள்ளனர். இதில், பங்கேற்றுள்ள பெரும்பாலானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்களில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த 74 வயது மூதாட்டியான மோனிகா, தனது 68 வயது கணவர் ஜான் ஹேமண்ட் உடன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்.

இது குறித்து இப்பயணிகள் கூறியது: இந்திய கலாசாரம், பழக்கவழக்கங்களை அறிந்து கொள்வதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றால் எளிதாக இருக்கிறது. பழைமையான கோயில்கள், தேவாலயங்கள், சுற்றுலா தலங்களைப் பார்க்கிறோம். இதன் மூலம், எங்களது நாட்டிலும், இங்குள்ள கட்டடக்கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றையும் அறிந்து கொள்கிறோம் என்றனர்.

Tags

Next Story