வனத்துறை விழிப்புணர்வு - கடல் வாழ் உயிரினங்களை காக்கும் மீனவர்கள்

வனத்துறை விழிப்புணர்வு - கடல் வாழ் உயிரினங்களை காக்கும் மீனவர்கள்

கடலில் விடப்பட்ட கடற்பசு 

மாவட்ட வனத்துறை மேற்கொண்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதில் மீனவர்களிடையே ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் காணப்படும் கடற்பசு மிக அரிய வகை கடல்வாழ் பாலூட்டி உயிரினம் ஆகும். கடல் மாசு மற்றும் கடல் புல் அழிக்கப்படுவதால், இந்த இனம் பேரழிவை சந்தித்து வருகிறது. மேலும், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, கடல் குதிரை, கடல் பாம்பு, கடல் அட்டைகள், கடல் ஆமை என 4000 மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த கடல் பகுதியில் அழியும் நிலையில் குறைந்த எண்ணிக்கையில் கடல் பசுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த அரிய வகை உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், அதனை பாதுகாக்கும் பணியில், இந்திய வனவிலங்கு நிறுவனம், தமிழ்நாடு அரசு வனத்துறை, ஓம்கார் பவுண்டேஷன் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மனோராவை மையமாகக் கொண்டு, ரூ.15 கோடி மதிப்பீட்டில், தமிழ்நாடு அரசு கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்றும் வகையில், மீனவ கிராமங்களில் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இவர் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலராக பொறுப்பேற்ற பிறகு தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், சம்பைபட்டினம், செந்தலைப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களுக்கு, வனத்துறையினருடன் சென்று அப்பகுதி ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், மீனவர் சங்கத் தலைவர்கள், மீனவர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசி, அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதன் எதிரொலியாக, மீனவர்களிடையே அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் 12க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் ஆமைகள் மீனவர்கள் வலையில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டு கடலில் பத்திரமாக விடப்பட்டது. மேலும், இரண்டு கடல் பசுக்கள் உயிருடன் மீட்கப்பட்டு கடலுக்குள் விடப்பட்டது.

இதுகுறித்து, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் கூறுகையில், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில், தொடர்ந்து கடலோர கிராமங்களில் மீனவர்களை சந்தித்து அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தன்னார்வ நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அரியவகை கடல் பசு, கடல் ஆமைகளை மீட்டு உயிருடன் கடலில் விட்ட மீனவர்கள், அது குறித்து அளித்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சின்னமனை கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் முருகேசன், ராஜேந்திரன் மகன் ஹரிஹரன், கஜேந்திரன் மகன் பாலசிங்கம் ஆகியோர் தங்கள் வலையில் சிக்கிய கடல் ஆமையை உயிருடன் மீட்டு கடலில் விட்டனர். அவர்களுக்கும், ஏற்கனவே கடல்பசு, கடல் ஆமையை மீட்டு கடலில் விட்ட 15க்கும் மேற்பட்டோருக்கு, மே.28 ஆம் தேதி கடல் பசு தினத்தில் மனோராவில் பாராட்டு விழா நடத்தி ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்" என்றார்

Tags

Read MoreRead Less
Next Story