4வது நாளாக காட்டுத்தீ - தினறும் வனத்துறை !

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த மூன்று மாவட்டங்களிலிருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டிச்சோலை பாரஸ்ட் டேல் வனப்பகுதியையொட்டி எபினேசர் ஜெயசீலபாண்டியன், தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 12ம் தேதி கவாத்து பணி நடந்துள்ளது. கவாத்து செய்த தேயிலை செடிக் கழிவுகளை தீயிட்டு எரித்துள்ளனர். தீ அருகிலுள்ள வனப்பகுயிலும் பரவியது. இதற்கு காரணமாக இருந்த எபினேசர் உட்பட நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிவேகமாக பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த கடந்த மூன்று நாட்களாக நீலகிரி மாவட்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் போராடி வந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு, தீயணைப்பு துறையினர்யினருடன் இணைந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணி இன்று தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காட்டுத்தீ குறித்து, சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், காட்டுத்தீ பரவல் குறையாத பட்சத்தில் ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story