ஏற்காடு மலைப்பாதையில் காட்டுத்தீ

ஏற்காடு மலைப்பாதையில் காட்டுத்தீ

தீயை அணைக்கும் பணி 

ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட காட்டுத்தீயை 5 மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். மேலும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் என்பதால் ஏற்காடு மலையில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கடும் வறட்சி ஏற்பட்டு வனப்பகுதியில் உள்ள மரங்களும் காய்ந்து வருவதை காணமுடிகிறது. குறிப்பாக ஏற்காடு வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் மரங்கள், செடிகள் காய்ந்து சருகுகளாக காட்சி அளிக்கிறது. மரங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. இதனிடையே, ஏற்காடு மலைப்பாதையில் 8-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் மளமளவென செடிகளில் வேகமாக தீ பரவியதால் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனால் மலைப்பாதை முழுவதும் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ஏற்காடு தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியதால் அவர்களால் அணைக்க முடியாமல் திணறினர். இதனால் சேலம் செவ்வாய்பேட்டையில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டது. இதன் காரணமாக சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு இரவு 7 மணிக்கு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். காட்டுத்தீ காரணமாக ஏற்காடு மலைப்பாதை முழுவதும் புகையும், சாம்பலுமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags

Read MoreRead Less
Next Story