குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கடமான் முட்டியதில் வன ஊழியர் பலி
தமிழ்ச்செல்வன்
சேலம் ஏற்காடு மலையடிவார பகுதியில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் புள்ளிமான், கடமான், முதலை, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள், கிளி, வெள்ளை மயில் உள்ளிட்ட பறவைகள், பாம்பு என 200-க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விலங்குகளை பராமரிக்கும் பணியில், வன ஊழியர்கள் மற்றும் தற்காலிக வன ஊழியர்கள் என 15 பேர் ஈடுபட்டு வந்தனர்.
நாமக்கல்லை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 25), குரும்பப்பட்டியை சேர்ந்த முருகேசன் (45) ஆகியோர் தற்காலிக விலங்கு பாதுகாவலர்களாக இங்கு பணியாற்றி வந்தனர். நேற்று இவர்கள் 2 பேரும் கடமான்கள் உள்ள பகுதிக்கு உணவாக கோதுமை தவிடு வழங்க அதற்குரிய வண்டியில் சென்றனர். அங்கு உணவு தொட்டியில் கோதுமை தவிட்டை தமிழ்ச்செல்வன் கொட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கடமான் ஆக்ரோஷத்துடன் ஓடி வந்து தமிழ்ச்செல்வனை முட்டி தள்ளியது.
இதில் அவர் கீழே விழுந்த நிலையில் மீண்டும், மீண்டும் அவரை கடமான் முட்டியது. தமிழ்ச்செல்வனின் வயிறு, கை, கால், நெஞ்சு பகுதியில் கடமான் தொடர்ந்து முட்டியதால் ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகேசன், தமிழ்ச்செல்வனை காப்பாற்றுவதற்காக வெளியே இழுத்தார். அப்போது அவரையும் கடமான் கடுமையாக முட்டி தாக்கியது. இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகள் சத்தம் போட்டு கூச்சலிட்டனர். உடனே அலுவலகத்தில் இருந்த சக வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர். இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தமிழ்ச்செல்வனை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதேநேரத்தில் படுகாயம் அடைந்த முருகேசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.