காடுகள் பூமியின் நுரையீரல் - மாவட்ட வன அலுவலர்
மரக்கன்று நடவு
உலக வன நாள் தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வனத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அவர் பேசியதாவது, பூமியின் ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் வாழ்விடமாக விளங்குவது காடுகளே . மக்கள் தொகை பெருக்கத்தாலும், நாகரிக வளர்ச்சியாலும் காடுகள் அழிக்கப்படுகின்றன . பூமியின் நுரையீரலாக திகழக் கூடிய காடுகளை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த காடுகள் நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தப்படுத்து வதுடன் மழை பொழிவுக்கும் காரணமாக திகழ்கிறது. பருவநிலை மாற்ற, இயற்கை பேரிடர், விலங்கியல் நோய்கள் அனைத்தும் வனங்கள் அழிக்கப்படுவதால் உண்டாகிறது. மனிதர்கள் இன்றி காடுகள் இருக்கும் ஆனால் காடுகள் இன்றி மனிதன் வாழ இயலாது .எனவே ஒவ்வொருவரும் இயன்றவரை மரக்கன்று நட வேண்டும் என்றார் .
அரியலூர் அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை இணைப் பேராசிரியர் ஜெயக்குமார் பேசுகையில், உலகின் ஆக்சிஜன் தொழிற்சாலையாக விளங்கும் காடுகளை பாதுகாக்க வேண்டும் என்றார் . இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். வனவர்கள் ஜீவராமன், சிவக்குமார், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.முன்னதாக பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் செந்தமிழ்செல்வி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, செவ்வேள், தங்கபாண்டி, அந்தோணிசாமி ஆகியோர் செய்திருந்தனர்.