நகை அடமான பணம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை மீது குற்றசாட்டு

நகை அடமான பணம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை மீது குற்றசாட்டு

விவசாயி கண்ணன்

மனைவியின் நகைகளை அடகு வைத்து மாடு வாங்க கொண்டு சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ஆவணங்களை சமர்ப்பித்தும் பணத்தை திருப்பி தர மறுப்பதாக விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சேரமங்கலம், பொட்டல் பகுதி சேர்ந்த விவசாயி கண்ணன் (39) என்பவர் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இரணியல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் மணவாளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தேன். உடனே அதிகாரிகள் இருசக்கர வாகனத்தை வழிமறித்து, நடத்திய சோதனையில் நான் கொண்டு சென்ற பையில் 65 ஆயிரம் ரூபாய் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மனைவியின் நகைகளை அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த பணம் மூலம் மாடு வாங்க கொண்டு செல்கிறேன் என கூறியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மேலும் உரிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என கூறினர். அதன்படி நகை அடகு வைத்த ரசீது மற்றும் எனது ஆதார் கார்டு உடன் கலெக்டர் அலுவலகம் வந்து தேர்தல் கண்காணிப்பு குழு அலுவலகத்தில் காண்பித்த பிறகும் எனது பணத்தை தர அதிகாரிகள் மறுக்கின்றனர்.

இந்த பணத்தை உடனடி தந்தால் தான் மாடுகள் வாங்க முடியும். இல்லையென்றால் எனக்கு அதன் மூலம் வருமானம் பாதிக்கப்படும். இந்த பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story