முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா!
திருப்பூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ. மற்றும் மேயர் தினேஷ்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பெரியார், அண்ணா சிலை முன்பு கலைஞர் கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதற்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் அங்கு அறுசுவை உணவுகளையும் வழங்கினர். மேலும், மாநகராட்சி அலுவலகம் மற்றும் புதிய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், அறுசுவை உணவுகளையும் வழங்கி கொண்டாடினர்.
இதுபோல் வடக்கு மாவட்ட விவசாய அணி சார்பில், தந்தை பெரியார், அண்ணா சிலை முன்பு ரூ.1 லட்சம் மதிப்பிலான விவசாய உபகரணங்களை செல்வராஜ் எம்.எல்.ஏ-. வழங்கினார். மேலும், ஜூன் மாதம் முழுவதும் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.