சின்னவநாயக்கன்பட்டியில் பொன்னேர் திருவிழா!
பொன் ஏர் திருவிழா
புதூர் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் கரிசல் பூமி விவசாயிகள் சார்பில் பொன் ஏர் திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் கரிசல் பூமி விவசாயிகள் சார்பில் பொன் ஏர் திருவிழா நடைபெற்றது. பொன் ஏர் திருவிழாவை முன்னிட்டு விவசாயிகள் காலையில் தங்கள் காளை மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பொட்டு வைத்து , மாலையிட்டு தயார்படுத்தினர். மேலும் கலப்பைகளுக்கு மஞ்சள் பூசி, நெல், பருத்தி, பயறு உள்ளிட்ட தானிய விதிகளுக்கு வீடுகளில் பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து பொதுக்கோயிலான பிள்ளையார் கோயிலில் வைத்து கலப்பை, வாச்சாத்து, சாட்டைக் கம்பு, தானிய விதைகள் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.பின்பு கோவில் நிலத்தில் ஏர் பூட்டி உழுது விவசாயப் பணிகளை தொடங்கினர். நிலத்தில் உழுது விட்டு வீடு திரும்பிய போது பெண்கள் வீடுகளின் முன்பு முறைமாமன் மீது ஊற்றுவதற்காக மஞ்சள் நீருடன் காத்திருந்தனர். பின்னர் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்றது. அனைவருக்கும் பானக்காரம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் எர்ரையா, கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன், பட்டத்துக்காரர் பாரதிதாசன், அம்பலம் முத்துகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் பால்ராஜ், வேலுச்சாமி, மூத்த விவசாயிகள் சுப்புராஜ், ராமசாமி, முத்துமாரிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்
Next Story