டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை
கோட்டாச்சியரிடம் மனு அளித்த முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சுபலட்சுமியிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.லதா, மாவட்ட துணை செயலாளர் துரைசெல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தன், பிரேம்குமார், தங்கவேலு, கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர்கள் திருநாவுக்கரசு, பிச்சைமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அந்த மனுவில்,"குடியாத்தம் காமராஜர் பாலம் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையால் பாலம் கட்டுமான பணியும், சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. இரவில் பெண்களும் ஆண்களும் செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். எனவே, உடனடியாக அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட சந்தப்பேட்டை பழைய மாட்டுச்சந்தை பகுதியில் ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனுக்காக கட்டப்பட்ட பகத்சிங் சமுதாயக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குடியாத்தம் பகுதியில் தனியாக குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும், குடியாத்தம் மேல்செட்டிக்குப்பம் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டி உள்ளனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தன.மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.