முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கு இன்று விசாரணை
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், அவரது உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கில் கடந்த 3 நாட்களாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி, தன்னுடைய வாதத்தை முன்வைத்தார், இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாசும், அவரது தரப்பு வக்கீலும் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை மீண்டும் இன்று நடைபெறும் என மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.