கல்லூரி வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு: நான்கு மாணவா்கள் கைது

கல்லூரி வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு: நான்கு மாணவா்கள் கைது

மாணவர்கள் கைது

திருச்சி மாவட்டம், துறையூா் அருகேயுள்ள கண்ணனூா் பகுதியில் செயல்படும் தனியாா் கல்லூரி வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய 4 கல்லூரி மாணவா்களை ஜெம்புநாதபுரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அருகே உள்ள தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அப்போது மேடையின் அருகே நின்று கொண்டிருந்த மைக்ரோ பயாலஜி மூன்றாம் ஆண்டு படிக்கும் பவித்ரன் என்ற மாணவரை இருக்கையில் அமருமாறு கல்லூரி உதவி பேராசிரியா் கூறியுள்ளாா். இதனை மறுத்த மாணவா், அறையை விட்டு வெளியே சென்ற அவா், கல்லூரி முடிந்து வந்த ஆசிரியரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.

இதையடுத்து, அம்மாணவரின் கல்லூரி அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொண்டு உதவி பேராசிரியா் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவா் பவித்ரன், திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் தனது சக நண்பா்களான ஜீவா, பிரதீஷ் மற்றும் அடையாளம் தெரியாத முதலாம் ஆண்டு மாணவா் உள்ளிட்ட நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து கல்லூரி வாசல் சுவரில் வீசி விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், துறையூா் காளிப்பட்டி பவித்ரன் (22), காளிபட்டி கபிலன் (22), துறையூா் பிரதீஷ் (21), மணலோடை தோனூா் ஜீவா (20) ஆகிய நான்கு பேரையும் ஜெம்புநாதபுரம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story