பூந்தமல்லி அருகே சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி
சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ஏபிஆர் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை இயங்கி வந்தது.
இந்த நிறுவனத்திற்கு திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் இதேபோல் அண்டை மாநிலங் களான ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சுமார் 50 கிளைகள் உள்ளன. தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை கால சிறப்பு சேமிப்பு திட்டங்கள், மளிகை பொருட்கள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், தங்க நகை, வெள்ளி பொருட்கள் என கவர்ச்சிகரமான அறிவிப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சீட்டுக்கு ஆள் சேர்ப்பவர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் பரிசுகளை இந்த நிறுவனம் வழங்கியது. இதையடுத்து ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திட்டத்தில் இணைந்து பணம் செலுத்திய மக்களுக்கு பொருட்கள் வழங்கவில்லை.
இதுதொடர்பாக, சீட்டு பணம் கட்டியவர்கள் கொடுத்த புகாரில் அதன் உரிமையாளரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிறுவனத்திற்கு பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் கிளை ஒன்றும் செயல்பட்டு வந்தது. அந்தக் கிளையும் தற்போது மூடப்பட்டுள்ளது. காட்டுப்பாக்கம் கிளையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல லட்சம் பணம் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காட்டுப்பாக்கம் கிளையில் பணம் கட்டியவர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, செய்யாறு , திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த நிறுவனத்திற்கு ஏஜெண்டுகளாக செயல்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்கள் அங்கு குவிந்தனர். ஆனால் காட்டுப்பாக்கம் கிளை மூடப்பட்டுள்ளதை அறிந்து வந்தவர்கள் ஆத்திரமடைந்து பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்து விட்டனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது : செய்யாறு பகுதியில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த இந்த நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை திறந்து தீபாவளி சீட்டு, மாத சீட்டு, நகை சீட்டு என பல்வேறு சீட்டுகள் நடத்தி வந்தனர்.
இதில் 15 பேரை சேர்த்து விட்டால் ஒரு கார் இலவசம் என கூறியதின் பேரில் ஏராளமானோர் இந்த திட்டத்தில் பெண்களை சேர்த்து விட்டனர். காட்டுப்பாக்கத்தில் மட்டும் பல கோடி மோசடி நடந்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி வந்து பணத்தை திரும்ப தருவதற்கு உறுதி அளிக்க வேண்டும்.
எங்களை நம்பி இந்த சீட்டில் சேர்ந்தவர்கள் தற்போது எங்களது வீடுகளுக்கு வந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.